ரூ28 லட்சம் மோசடி உயிர் மூச்சு திரைப்படம் வெளியீட்டாளர் இயக்குனர் மீது சைபர் கிரைமில் புகார் மனு
ரூ28 லட்சம் மோசடி உயிர் மூச்சு திரைப்படம் வெளியீட்டாளர் இயக்குனர் மீது சைபர் கிரைமில் புகார் மனு தூத்துக்குடி மாவட்டம் அத்திமரபட்டி விவசாயி ரா. ஜோதிமணி, தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைமில் வழங்கிய புகார் மனுவில் கூறியதாவது..
அத்திமரப்பட்டியைச் சேர்ந்த விவசாயியான ரா. ஜோதிமணி ஆகிய நான் தயாரித்த 'உயிர்மூச்சு' என்ற குறைந்த பட்ஜெட் திரைப்படத்திற்கு திரு. பிராட்வே சுந்தர் இயக்குநராகப் பணியாற்றினார். குறைந்த பட்ஜெட்டில் படத்தை முடிக்க, அனைத்து செலவுகள் மற்றும் சம்பளம் உட்பட 20 லட்சம் ரூபாய் பணத்தை அவர் சொன்னபடியே என்னிடம் வாங்கி படத்தை முடித்து கொடுத்து -தணிக்கை வாரியத்திடமிருந்து சான்றிதழையும் பெற்றுவிட்டோம்.
இந்தப் படத்தை வெளியிடுவதற்கான அனைத்துத் தகுதிகளும் அனுபவமும் என்னிடம் உள்ளன. எனக்கு எல்லா விவரங்களும் 100க்கு 150 மடங்கு தெரியும். நான் பல படங்களை வெளியிட்டிருக்கிறேன், 'உயிர்மூச்சு' திரைப்படத்தை 200 திரையரங்குகளில் வெளியிடுவேன். இனி யாரும் தலையிடக் கூடாது. நான் எல்லாவற்றையும் என் விருப்பப்படியே செய்வேன். இனிமேல் தயாரிப்பாளர் கால்மேல் கால்போட்டு உட்காரலாம் என்று சொல்லியதால் -அவரை நம்பி முழுப் பொறுப்பையும் ஒப்படைத்தால், தமிழ்நாடு முழுவதும் படத்தை வெளியிட அவருக்கு 7,00,000 ரூபாய் (ஏழு லட்சம்) மட்டுமே கொடுத்தால் போதும் என்று என்னை முழுமையாக நம்ப வைத்துவிட்டார்.
ஆகவே, அவர் சொன்னபடியே, நான் அவருக்கு முழு அதிகாரம் கொடுத்து அவரை முழுமையாக நம்பி ரூ.ஏழு லட்சத்தையும் கொடுத்து, தயாரிப்பாளரின் கடிதத் தலைப்பு மற்றும் வெற்றுத் தாள்களில் கையெழுத்து போட்டு, தாலி முதற்கொண்டு அனைத்து சாமானையும் ஈடு வைத்து, ரசீதையும் காட்டி அவர் கேட்ட பணத்தை கொடுத்தேன், ஐயா.
தூத்துக்குடியில் ஒரே ஒரு தியேட்டரில் மட்டும் படத்தை வெளியிட்டு -நான் கொடுத்த ரூ.ஏழு லட்சத்தையும் வீணாக்கிவிட்டார்.
தமிழ்நாடு முழுவதும் படத்தை வெளியிட அவர் என்னை ஏமாற்றி, எங்கள் சங்கத் தலைவரிடம் நான் பேசவிடாமல் செய்து, எங்கள் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத, பெரிய படங்களின் புதிய விநியோகஸ்தர் என்று கோயம்புத்தூர் சில்வர் பிக்சர்ஸின் திரு. முரளி என்பவரை அறிமுகப்படுத்தி, அவரையும் உடன் அழைத்து வந்தார்.
முன்பு கொடுத்த ரூ.ஏழு லட்சம் போக மேலும் அவர்கள் இருவரும் சேர்ந்து ரூ. 20,10,000 (இருபது லட்சத்துப் பத்தாயிரம்) என்னிடம் வாங்கினார்கள், அதிக வட்டிக்கான ரசீதை நான் காட்டியபோதும், அவர்கள் பணத்தின் மீதே குறியாக இருந்து, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் திரையிட அவர்கள் அனுபவத்தைக் கொண்டு வெறும் 105 திரையரங்குகளில் மட்டுமே படத்தை வெளியிட முடியும் என்று என்னை நம்ப வைத்தனர்.
எடுத்த படத்தை வெளியிட்டே ஆகவேண்டிய சூழ்நிலையால், அவர்கள் சொன்னபடியே நம்பியதால் -எனது 'உயிர் மூச்சு' திரைப்படத்தை 105 திரையரங்குகளில் வெளியிடுவேன் என்று சொல்லி -ஒரு வருடம் கடந்தும் எனது உயிர்மூச்சு திரைப்படத்தை வெளியிடாமல் ஏமாற்றி விட்டார்கள்.
இயக்குனர் திரு.பிராட்வே சுந்தரிடம் இருக்கும் ரூ.12,50,000/- (ரூபாய் பன்னிரெண்டு லட்சத்து ஐம்பதாயிரம்),
விநியோகஸ்தர் சில்வர் பிக்சர்ஸ் திரு.முரளியிடம் இருக்கும் ரூ.14,60,000/- (ரூபாய் பதினான்கு லட்சத்து அறுபது ஆயிரம்)
மொத்தம் ரூ.27,10,000/- (ரூபாய் இருபத்தி ஏழு லட்சத்து பத்தாயிரம்)
வட்டிக்கடன் கட்டமுடியாமல் மனஉழைச்சலால் தூக்கம் இழந்து தவித்துக்கொண்டு இருக்கிறேன் ஐயா.
ஒரு விவசாயியான என்னை அவர்கள் திட்டம் போட்டு -சதித்திட்டம் தீட்டி ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்கள் ஐயா.
தாங்கள் விசாரணை செய்து -நான் இழந்த பணத்தை மீட்டுத்தந்து -காப்பாற்ற வேண்டுகிறோம் ஐயா.
இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.
tamilanda