ஓட்டப்பிடாரம் தாலுகா, கீழஅரசடி பஞ்சாயத்தைச் சேர்ந்த துப்பாஸ்பட்டி மற்றும் அய்யனார்புரம் கிராம மக்கள், தங்களது பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா, கீழஅரசடி பஞ்சாயத்தைச் சேர்ந்த துப்பாஸ்பட்டி மற்றும் அய்யனார்புரம் கிராம மக்கள், தங்களது பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து மனுவில் குறிப்பிட்டுள்ள முக்கியக் கோரிக்கைகள்:
தூத்துக்குடி கீழஅரசடி பஞ்சாயத்துப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் சமீபத்தில் 10060 என்ற எண் கொண்ட புதிய டாஸ்மாக் மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது.
இக்கடையின் அருகாமையில் பேருந்து நிறுத்தம், குடியிருப்புகள் மற்றும் கடலோரச் சோதனைச் சாவடி ஆகியவை அமைந்துள்ளன. மதுபானக்கடைக்கு வெளியூர்களிலிருந்து ஏராளமான நபர்கள் வந்து செல்வதால், அப்பகுதி பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலும் இடையூறும் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் பெரும்பாலும் உப்பளத் தொழிலாளர்களாகவும், தினக்கூலிகளாகவும் பணிபுரிந்து வருவதால், இக்கடையினால் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே, பொது அமைதி, சட்ட ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, புதிதாக திறக்கப்பட்டுள்ள 10060 எண் கொண்ட டாஸ்மாக் மதுபானக் கடையை நிரந்தரமாக அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
tamilanda