கொலைவெறித் தாக்குதலில் உயிருக்குப் போராடும் கணேசன் – குற்றஞ்சாட்டப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்யக் சட்ட உரிமைகள் கழகம் கோரிக்கை! -
கொலைவெறித் தாக்குதலில் உயிருக்குப் போராடும் கணேசன் – குற்றஞ்சாட்டப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்யக் சட்ட உரிமைகள் கழகம் கோரிக்கை! -
இதுகுறித்து சட்ட உரிமைகள் கழக நிறுவன தலைவர் டாக்டர் செல்வம் கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 13.09.2026 அன்று இரவு கணேசன் என்ற இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதாக, அவரது தாயார் சின்னம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் குற்ற எண் 460/2026, BNS பிரிவு 109(1)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கணேசன் இரும்புக் குழாய் உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு, தலை, முகம், கை, வயிறு மற்றும் கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்துள்ளார். தற்போது அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், நாடித்துடிப்பு குறைந்து உயிருக்குப் போராடி வருவதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவ்வளவு தீவிரமான தாக்குதல் தொடர்பாகக் கொலை முயற்சி பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையிலும், முதல் தகவல் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை எனக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
எனவே, முதல் தகவல் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களைத் தேடி உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அவர்கள் தலைமறைவாக இருந்தால், தனிப்படை அமைத்து விரைவான தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட கணேசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான காவல்துறைப் பாதுகாப்பை வழங்க வேண்டும்.
கணேசனுக்கு உயர்தர உயிர்காக்கும் மருத்துவச் சிகிச்சையை அரசின் முழுச் செலவில் வழங்குவதுடன், அவரது குடும்பத்திற்கு உடனடி நிவாரண உதவியும் வழங்க வேண்டும். மருத்துவ அறிக்கைகள் மற்றும் விசாரணையில் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் தேவையான கூடுதல் சட்டப்பிரிவுகளை இணைத்து, வெளிப்புறத் தலையீடுகளுக்கு இடமளிக்காமல் நேர்மையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும். விசாரணையின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு முறையாகத் தகவல் தெரிவிக்க வேண்டும். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு அரசியல் அல்லது பிற செல்வாக்குகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க அனுமதிக்கக் கூடாது.
எனவே, தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இவ்வழக்கில் உடனடியாகத் தலையிட்டு, குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதற்கான விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதிப்படுத்துமாறு சட்ட உரிமைகள் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
tamilanda