புகார்கள் தொடர்பாக முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்

புகார்கள் தொடர்பாக முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் நகையை அடமானம் வைக்கும் வாடிக்கையாளர்களை உடனடியாக நகையை திருப்பிக் கொள்ளுமாறு வற்புறுத்தி, வேறு நிதி நிறுவனத்தில் அதிக வட்டிக்கு பணம் பெற்று நகையை மீட்கச் சொல்வதாக கூறப்படும் புகார்கள் தொடர்பாக முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி வேலவன் ஸ்டோர்ஸ் நகைக்கடையில் வாங்கப்பட்ட நகை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, விக்கிரமராஜா அந்நிறுவனத்திற்கு நேரில் சென்று நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வேலவன் ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் வாங்கப்பட்ட நகையை வாடிக்கையாளர் ஒருவர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் அடகு வைத்தபோது, நகையின் தரம் தொடர்பாக பிரச்சினை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நகையை மீட்டு ஆய்வு செய்வதற்காக வேலவன் ஸ்டோர்ஸ் நிர்வாகம் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி, முத்தூட் பைனான்ஸில் அடகு வைக்கப்பட்டிருந்த நகையை மீட்டதாகவும், பின்னர் ஆய்வு செய்தபோது நகையின் தரம் சரியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், வாடிக்கையாளரின் உறவினரான இசக்கி ராஜா என்பவர் வேலவன் ஸ்டோர்ஸ் நிர்வாகத்திடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக விக்கிரமராஜா தெரிவித்தார்.

மேலும், “வணிகர்கள் அனைவரையும் சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு ஒரு தாய் பிள்ளைகளாகவே கருதுகிறோம். வணிகர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால் வணிகர் சங்கம் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். இந்த விவகாரத்தை சாதி, மதம் உள்ளிட்ட எந்த அடிப்படையிலும் பார்க்காமல், வணிகம் தொடர்பான பிரச்சினையாக மட்டுமே அணுக வேண்டும்” என்றார்.

முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்துள்ள சில வாடிக்கையாளர்களிடமிருந்து பல்வேறு புகார்கள் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“நகை அடகு வைப்பதில் பின்பற்றப்படும் நடைமுறைகள், வசூலிக்கப்படும் வட்டி உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம். அடகு வைத்த நகையை உடனடியாக திருப்பிக் கொள்ள வேண்டும் என்றும், வேறு நிதி நிறுவனத்தில் அதிக வட்டிக்கு பணம் பெற்று நகையை மீட்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் உண்மையா என்பது குறித்து உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும்.

ஏதேனும் விதிமீறல்கள் அல்லது குறைபாடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் முழுமையான ஆய்வு தேவை” என விக்கிரமராஜா தெரிவித்தார்.

மேலும், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பாதுகாத்து வருவதாகவும், எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சட்டப்படியே எதிர்கொள்வோம் என்றும் அவர் கூறினார்.

பேட்டி:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா