உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டம் - 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டா் இளம்பகவத் வழங்கினார்.
finding-you-in-your-town-project-collector-ilam-bhagwat-provided-welfare-assistance-to-60-beneficiaries
உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டம் - 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டா் இளம்பகவத் வழங்கினார்.
– தூத்துக்குடி அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் “உங்களைத்தேடி, உங்கள்ஊரில்” என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து தொடங்கி வைத்தார். அதன்படி, ஓவ்வொரு மாதமும் மாவட்ட அளவிலான அரசு உயர்அலுவலர்களுடன் குறிப்பிட்ட வட்டத்தினை தேர்வு செய்து, அங்கு அரசின் பல்வேறுதுறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்துகள ஆய்வு மேற்கொள்வார்கள்.
இந்நிலையில் “உங்களைத்தேடி, உங்கள்ஊரில்” திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கலெக்டா் இளம்பகவத் பார்வையிட்டு களஆய்வு செய்தார். சாத்தான்குளம் வட்டம், கட்டாரிமங்கலம் ஊராட்சி கீழ்அம்பலசேரி கிராமத்தில் "நம்ம ஊரு நம்ம அரசு" 2025-2026-ன் கீழ் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மற்றும் 5 ஹச்.பி மின் மோட்டரினை பார்வையிட்டார். தொடர்ந்து, ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி சவேரியார்புரம் கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் 2025-26 திட்டத்தில் ரூபாய் 3.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமான பணிகளையும், மேலும் கருங்கடல் முதல் கீழகருங்கடல் சமூக நீதி காலனி வரை ஊரக சாலை மேம்பாடு திட்டம் 2025-26-ன் கீழ் சாலை பழுதுபார்க்கும் பணிகளையும், பிடாநேரி ஊராட்சியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் பிடிஎம்சி திட்டம் 2024-25-ன் கீழ் சொட்டு நீர் பாசனம் மூலம் பயிர் மற்றும் வாழை மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டார். பின்பு, எழுவரைமுக்கி ஊராட்சி, தோப்பூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினையும், மேலும், எழுவரைமுக்கி ஊராட்சி, மேற்கு வழிவிள்ளை கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் 2025-26 மூலம் குறுங்காடுகள் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். முதலூர் ஊராட்சியில் உள்ள பெண்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வளர்ச்சி மையத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் நடைபெற்ற கால்நடை வளர்ப்போருக்கான பராமரிப்பு தொழில் நுட்பபயிற்சி வகுப்பினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மேலும், முதலூர் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட விழுதுகள் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தினையும், முதலூர் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலுள்ள வட்டார பொது சுகாதார ஆய்வகத்தினை பார்வையிட்டு, அங்குள்ள மருத்துவ வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, படுக்கப்பத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினையும் மற்றும் படுக்கப்பத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவ கட்டிடங்களையும், பின்பு பெரியதாழை ஊராட்சியில் ரூபாய் 80 இலட்சம் மதிப்பீட்டில் மீன்பிடி இறங்கு தலத்தினை மேம்படுத்தும் பணிகள் தொடர்பாகவும் அங்குள்ள பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார், அரசூர் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிதாக வீடுகள் கட்டுப்பட்டு வரும் கட்டுமானப்பணிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 950 மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கனிவுடன் கேட்டறிந்தார்கள். மேலும், இலவசவீட்டு மனைபட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறுதுறைகளின் சார்பாக 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், அனைத்துத்துறை மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் காலையில் மேற்கொண்ட களப்பயணங்கள், அலுவலக ஆய்வுகள் குறித்து கேட்டறிந்து, சாத்தான்குளம் வட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதி செய்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்தினார்கள்.
ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரவிச்சந்திரன், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஐஸ்வர்யா, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கௌதம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் செந்தில்வேல் முருகன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர் பென்னட்ஆசீர், உதவிஆணையர் கலால் கல்யாணசுந்தரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை மனோரஞ்சிதம், மாவட்ட மாற்றுத்திறனாளி நலஅலுவலர் பிரம்மநாயகம், மாவட்ட சுகாதார அலுவலர் யாழினி, துணை ஆட்சியர் பயிற்சி மகேந்திரன், சாத்தான்குளம் வட்டாட்சியர் ராஜேஸ்வரி, சாத்தான்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுதா மற்றும் அரசுதுறைச் சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
tamilanda