திருச்செந்தூரில் பக்தர்களுக்கு இடமில்லை; அதிகாரிகளுக்கு மட்டும் விடுதியா?
திருச்செந்தூரில் பக்தர்களுக்கு இடமில்லை; அதிகாரிகளுக்கு மட்டும் விடுதியா?
தூத்துக்குடி, நவ.4 :
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவிற்கு, பக்தர்கள் தங்கும் விடுதிகள் அதிகாரிகளுக்காக முடக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா வரும் நவ.10-ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கி, நவ.16-ம் தேதி வரை நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவ.15-ம் தேதி நடைபெறுகிறது. இதில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கோவில் வளாகத்தில் உள்ள ஆறுமுகம், குமரவிடங்கள், விசாகன் ஆகிய 3 விடுதிகளில் சுமார் 150 அறைகள், ஆன்லைன் முன்பதிவு செய்ய முடியாதபடி முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
ஆறுமுகம் விடுதி இன்று முதலும், மற்ற இரண்டு விடுதிகள் வரும் 9-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையும் முடக்கப்பட்டுள்ளதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பக்தர்கள் கூறுகையில், "ஹெச்.சி.எல் நிறுவன சமூக பொறுப்பு நிதி மற்றும் தமிழக அரசு நிதியில் பக்தர்களுக்காக கட்டப்பட்ட விடுதிகளில், பக்தர்களுக்கே இடமில்லை. உயர் அதிகாரிகள், செல்வாக்கு மிக்கவர்களுக்காக மறைமுகமாக முன்பதிவு செய்யப்படுகிறது. இதனால் வெளியூரில் இருந்து வரும் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் தங்க இடமின்றி அவதிப்படுவார்கள்" என்றனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் தரப்பில், "சஷ்டி காலங்களில் நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் வருவது வழக்கம். அறநிலையத்துறை அதிகாரிகள், பாதுகாப்பு பணிக்கு வரும் காவல்துறை அதிகாரிகளுக்காக அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்குவதற்காக சஷ்டி மண்டபம் மற்றும் 9 தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், முடக்கப்பட்ட அறைகளை மீண்டும் பக்தர்களுக்கு திறந்துவிட வேண்டும் என்றும், யாருக்கு அறை ஒதுக்கப்பட்டது என்ற பட்டியலை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
tamilanda