தூத்துக்குடி மாநகரில் 20 இடங்களில் சட்டவிரோத நிலத்தடி நீர் விற்பனை: ராஜீவ் நகரில் மட்டும் சீல் வைத்த மாநகராட்சி! - நடவடிக்கை எடுக்க தயக்கமா?

தூத்துக்குடி மாநகரில் 20 இடங்களில் சட்டவிரோத நிலத்தடி நீர் விற்பனை: ராஜீவ் நகரில் மட்டும் சீல் வைத்த மாநகராட்சி! - நடவடிக்கை எடுக்க தயக்கமா?

தூத்துக்குடி மாநகரில் 20 இடங்களில் சட்டவிரோத நிலத்தடி நீர் விற்பனை: ராஜீவ் நகரில் மட்டும் சீல் வைத்த மாநகராட்சி! - நடவடிக்கை எடுக்க தயக்கமா?

தூத்துக்குடி, அக்.14:*தமிழகம் முழுவதும் கடும் வெயிலால் குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், தூத்துக்குடி மாநகராட்சியில் மட்டும் மேயர் ஜெகன் பெரியசாமி மேற்கொண்ட நடவடிக்கையால் தினசரி குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சிக்குள் சட்டவிரோத நிலத்தடி நீர் விற்பனை அமோகமாக நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலத்தடி நீர் எடுத்து விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக டூவிபுரம், வி.வி.டி சிக்னல் சர்வீஸ் ரோட்டில் இரண்டு இடங்களிலும், ராஜீவ் நகர் 3-வது தெருவில் மடத்தூர் செல்லும் சாலையில் ஒரு இடத்திலும் இந்த விற்பனை நடைபெறுகிறது.

இதில் பல இடங்களில் நிலத்தடி நீர் என்ற பெயரில், மாநகராட்சி வழங்கும் குடிநீரையே லாரிகள் மற்றும் சிறிய வாகனங்கள் மூலம் ஹோட்டல்கள், டீக்கடைகள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களுக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.

*ஆணையரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை:*

இது தொடர்பாக பல மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மற்றும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், "ஆய்வு செய்கிறோம்" என்று கூறிவிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முன்பு பணியில் இருந்த ஆணையர்கள் பலர் இது போன்ற நீர் விற்பனை நிலையங்களுக்கு சீல் வைத்த நிலையில், தற்போதைய நிர்வாகம் ராஜீவ் நகரில் உள்ள ஒரு நிலையத்திற்கு மட்டும் சீல் வைத்துவிட்டு, மற்ற 20 இடங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் மாநகராட்சிக்கு குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அனைத்து சட்டவிரோத நிலத்தடி நீர் விற்பனை நிலையங்களையும் மூடி நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.

மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? அல்லது வழக்கம் போல மௌனம் காக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.