தூத்துக்குடி மழைநீர் வடிகாலில் கழிவுநீர் கலப்பு - தங்கும் விடுதிக்கு ரூ.10,000 அபராதம்! ஆணையர் எச்சரிக்கை
தூத்துக்குடி மழைநீர் வடிகாலில் கழிவுநீர் கலப்பு - தங்கும் விடுதிக்கு ரூ.10,000 அபராதம்! ஆணையர் எச்சரிக்கை
தூத்துக்குடி, அக்.27: தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது சுகாதாரத்தை பாதுகாக்கவும், வடகிழக்கு பருவமழை நீர் தேங்காமல் கடலுக்கு செல்லவும் அனைத்து மழைநீர் வடிகால்களும், சிறு பாலங்களும் சுழற்சி முறையில் தூர்வாரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் நடத்திய கள ஆய்வின் போது, *ஜெயராஜ் ரோடு பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதி* ஒன்று, தனது கழிவுநீர் மற்றும் சமையலறை கழிவுகளை எவ்வித அனுமதியும் பெறாமல், மாநகராட்சி பராமரிக்கும் மூடப்பட்ட மழைநீர் வடிகாலில் (Cover Slab Storm Water Drain) நேரடியாக இணைத்திருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் மழைநீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு பொது சுகாதாரத்திற்கு கடும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவானது.
இதையடுத்து மாநகராட்சி சார்பில் அந்த விடுதி நிர்வாகத்திற்கு *ரூ.10,000 அபராதம்* விதிக்கப்பட்டது. அபராத தொகையை அந்நிறுவனம் செலுத்தியதுடன், கழிவுநீர் இணைப்பை உடனடியாக துண்டித்து முறையாக பாதாள சாக்கடையில் இணைக்கவும் உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பாக *மாநகராட்சி ஆணையர் திருமதி சி.பிரியங்கா இ.ஆ.ப* அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் கழிவுநீரை முறையாக அருகில் உள்ள பாதாள சாக்கடையில் இணைக்க வேண்டும் அல்லது தங்கள் வளாகத்திலேயே கழிவுநீர் தொட்டி அமைத்து வாகனங்கள் மூலம் வெளியேற்ற வேண்டும். மழைநீர் வடிகாலில் கழிவுநீரை விடுவோர் மீது அபராதம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்துள்ளார்.
மேலும் மாநகராட்சி சார்பில் தினசரி குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சி செய்தல், மக்கும் குப்பைகளை உரமாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
tamilanda