தூத்துக்குடியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியைப் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
தூத்துக்குடியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியைப் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இந்த மோதலில் உதவி ஆய்வாளர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மினி சகாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் டோம்னிக் மகன் மரிய ஆக்னல் (36). இவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் கொள்ளை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு பிரபல சரித்திரப் பதிவேடு ரவுடியான இவர், திருச்செந்தூர் அருகேயுள்ள சோனகன்விளை பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் அங்கு சென்ற உதவி ஆய்வாளர் ராஜ பிரபு தலைமையிலான போலீசார், ரவுடி ஆக்னலை கைது செய்ய முயன்றனர். அப்போது, ஆக்னல் தன்னிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியால் உதவி ஆய்வாளர் ராஜ பிரபுவை நோக்கிச் சுட்டுள்ளார். இதில் அவர் காயமடைந்தார். இதனையடுத்து, தற்காப்புக்காகவும் குற்றவாளியைப் பிடிக்கவும் உதவி ஆய்வாளர் ராஜ பிரபு தனது துப்பாக்கியால் ரவுடி ஆக்னலைச் சுட்டுப் பிடித்தார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த உதவி ஆய்வாளர் ராஜ பிரபு மற்றும் ரவுடி ஆக்னல் ஆகிய இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்துத் திருச்செந்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
tamilanda