பல கோடி ரூபாய் ஆன்லைன் மற்றும் லோன் மோசடிப் பேர்வழி – அஜீவ் கைது! சட்ட உரிமைகள் கழகத்தின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி!
பல கோடி ரூபாய் ஆன்லைன் மற்றும் லோன் மோசடிப் பேர்வழி – அஜீவ் கைது! சட்ட உரிமைகள் கழகத்தின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி!
கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, “Loan Processing Fee” என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் பெற்று பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகப் புகார் அளிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய அஜீவ் என்பவரை திருவனந்தபுரத்தில் உள்ள லீ மெரிடியன் (Le Méridien) ஹோட்டலில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், அஜீவ் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும், அவர்மீது 16 வழக்குகள் இருப்பதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கடன் மோசடி தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், சட்ட உரிமைகள் கழகம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதன் தொடர்ச்சியாக அஜீவ் கைது செய்யப்பட்டிருப்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் முக்கிய முன்னேற்றமாகும். இதனைச் சட்ட உரிமைகள் கழகத்தின் தொடர் முயற்சிகளுக்கும் போராட்டங்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
இந்தப் பல கோடி ரூபாய் கடன் மோசடி விவகாரத்தில் முக்கியத் தொடர்புடையவராகக் கருதப்படுவதாகப் புகார்களில் குறிப்பிடப்படும் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழனையும் காவல்துறையினர் முழுமையாக விசாரித்து வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்
மேலும், அஜீவ் மீது ஏற்கெனவே 16 வழக்குகள் இருப்பதால்; குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் முழுமையாக விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தை மீட்கவும், மோசடியில் பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோன்ற முறையில் ஏமாற்றப்பட்டுள்ள மற்றவர்களையும் கண்டறிந்து, அவர்களது புகார்களுக்கும் உரிய நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்.
காவல்துறையினரின் கைது நடவடிக்கையைச் சட்ட உரிமைகள் கழகம் வரவேற்கிறது. விசாரணை விரைவாகவும் நியாயமாகவும் நடைபெற்று, பாதிக்கப்பட்டவர்களின் பணம் மீட்கப்பட்டு, தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எங்களது உறுதியான கோரிக்கையாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நீதி கிடைக்கும் வரை சட்ட உரிமைகள் கழகத்தின் சட்டப்பூர்வமான போராட்டமும் தொடர் நடவடிக்கைகளும் தொடரும்!
*சட்ட உரிமைகள் கழகம்*
tamilanda