தூத்துக்குடியில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 462 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது! ரூ.14 லட்சம் ரொக்கம் சிக்கியது!
தூத்துக்குடியில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 462 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது! ரூ.14 லட்சம் ரொக்கம் சிக்கியது!
தூத்துக்குடி, நவ.11:
தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுகாலனி பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த 3 நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 462 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.14 லட்சம் ரொக்கம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, போதைப்பொருட்களின் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு அதிரடிப்படை (Anti-Narcotics Task Force) அமைக்கப்பட்டு தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி ஆய்வாளர் திரு. முத்துராஜ் தலைமையிலான ANTF காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் சேக் அப்துல் காதர் மற்றும் போலீசாருடன் இணைந்து புதுகாலனி பகுதியில் நேற்று (10.11.2026) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் அப்பகுதியில் உள்ள அவர்களது குடோனில் சோதனை செய்ததில், அவர்கள் புதுக்கோட்டை குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த தங்கப்பன் மகன் மாரிராமன் (45), கல்யாணசுந்தரம் மகன் ராமசுப்பு (26) மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த பன்னீர்செல்வன் மகன் ராஜ்குமார் (35) என்பதும், அவர்கள் மூவரும் சட்டவிரோத விற்பனைக்காக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனடியாக தெற்கு காவல் நிலைய போலீசார் மூவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 462 கிலோ புகையிலை பொருட்கள், ரொக்கம் ரூ.14 லட்சம் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
*கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு நடவடிக்கை:*
கடந்த ஆண்டு (2025) புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக 439 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 471 நபர்கள் கைது செய்யப்பட்டு, 3000 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 27 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 109 கடைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இந்த ஆண்டு இதுவரை 459 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 496 நபர்கள் கைது செய்யப்பட்டு, 7,612 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 28 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 112 கடைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
tamilanda