தூத்துக்குடியில் ஆர்.எஸ்.எஸ். 100-வது ஆண்டு சீருடை அணிவகுப்பு - வி.வி.டி. சிக்னலில் பொதுக்கூட்டம்!
தூத்துக்குடியில் ஆர்.எஸ்.எஸ். 100-வது ஆண்டு சீருடை அணிவகுப்பு - வி.வி.டி. சிக்னலில் பொதுக்கூட்டம்!
தூத்துக்குடி, நவ 1:
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, நாடு முழுவதும் சீருடை அணிவகுப்பு ஊர்வலங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் இந்த அணிவகுப்பு ஊர்வலங்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதற்கட்டமாக கடந்த அக்டோபர் 25-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக நவம்பர் 1-ம் தேதியும் அணிவகுப்பு ஊர்வலங்கள் நடைபெற்றன.
தூத்துக்குடியில் ஊர்வலம்:
தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த ஊர்வலம் வேம்படி இசக்கியம்மன் கோயிலில் இருந்து தொடங்கி, அண்ணா நகர், டூவிபுரம், காய்கறி மார்க்கெட் வழியாகச் சென்று வி.வி.டி. சிக்னல் அருகே நிறைவடைந்தது. ஊர்வலத்தை டாக்டர் சரவணன் தொடங்கி வைத்தார்.
ஆர்.எஸ்.எஸ். பற்றி:
கடந்த 1925-ம் ஆண்டு நாக்பூரில் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவாரால் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, தேசம், தர்மம், பண்பாடு ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.
தற்போது நாடு முழுவதும் 89 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தினசரி ஷாகாக்களும், 32,600 இடங்களில் வாராந்திர சந்திப்புகளும், 13,200 இடங்களில் மாதாந்திரக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. மேலும், தொண்டு அமைப்புகள் மூலம் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட சேவைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐந்து முக்கிய மாற்றங்கள்:
சமுதாயத்தில் ஐந்து முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் ஆர்.எஸ்.எஸ். செயல்பட்டு வருகிறது.
1. ஜாதி, மொழி வேறுபாடுகளைக் கடந்து சமூக நல்லிணக்கத்தை உருவாக்குதல்,
2. குடும்ப அமைப்பையும் அதன் மாண்பையும் பாதுகாத்தல்,
3. மரம் வளர்த்தல், நீர் சேமித்தல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுதல்,
4. தாய்மொழி மற்றும் உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கும் சுதேசி சிந்தனையை வளர்த்தல்,
5. சட்டங்களை மதித்தல், பொதுச்சொத்துகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட குடிமக்களின் கடமைகளைப் பின்பற்றுதல்.
இந்த மாற்றங்களை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுத்த வேண்டும் என்றும், அதற்காக பொதுமக்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
வி.வி.டி. சிக்னலில் பொதுக்கூட்டம்:
ஊர்வலத்தின் நிறைவாக வி.வி.டி. சிக்னல் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஸ்ரீ சீனிவாசன் தலைமை தாங்கினார். பூஜ்ய ஸ்ரீ பக்த லக்ஷண கிரி மகராஜ் ஆசியுரை வழங்கினார். ஸ்ரீ சந்தன செல்வம் முன்னிலை வகித்தார். ஸ்ரீ கணபதி சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
---
*Tags: #RSS #RSS100Years #Thoothukudi #RSSParade #VVDsignal*
tamilanda