திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை திருநாளன்று மட்டும் தீபம் ஏற்ற அனுமதி!
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை திருநாளன்று மட்டும் தீபம் ஏற்ற அனுமதி!
மதுரை, நவ.20:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபத் திருநாளான வரும் *நவம்பர் 24-ம் தேதி ஒரு நாள் மட்டும்* தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி அடங்கிய அமர்வு இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதே நேரத்தில், இந்த ஆண்டு ஒரு முறை மட்டும் கார்த்திகை தினத்தில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது இறுதி உத்தரவு அல்ல என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
நிபந்தனைகள் என்ன?
- தீபம் ஏற்றும் குழுவை மதுரை மாவட்ட ஆட்சியர் தேர்வு செய்ய வேண்டும். கோயில் நிர்வாகம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் மட்டுமே மலைக்கு சென்று தீபம் ஏற்ற வேண்டும்.
- பொதுமக்கள் யாரும் தீபம் ஏற்றும் இடத்திற்கு செல்ல அனுமதி கிடையாது.
- பொதுக்கூட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம், கோஷம் எழுப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தீபம் ஏற்றிய பிறகு அங்கிருப்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். எந்த பொருட்களையும் அங்கு விட்டு செல்லக்கூடாது.
- தீபத்தூணில் அகழ்வு, கட்டுமானம், மாற்றம் செய்யக்கூடாது.
- தர்கா மற்றும் மசூதிக்கு செல்லும் வழக்கமான வழிபாடு, வழிகளுக்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது.
- பாதுகாப்புக்கு காவல்துறையுடன் தேவைப்பட்டால் மத்திய தொழில் பாதுகாப்பு படையை (CISF) பயன்படுத்திக் கொள்ளலாம்.
- இந்த அனுமதியை வைத்து, எதிர்காலத்தில் உரிமை கோரவோ, வழக்கமாக இருந்ததாக கூறவோ முடியாது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என ராம ரவிக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். தனி நீதிபதி அதை அனுமதித்து, இரு நீதிபதிகள் அமர்வும் அதை உறுதி செய்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை, தர்கா நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். அரசு தரப்பில், 150 ஆண்டுகளாக உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில் தான் தீபம் ஏற்றப்பட்டு வருவதாகவும், தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை என்றும் வாதிடப்பட்டது.
மேலும் ஆவணங்கள் தாக்கல் செய்ய 6 வார கால அவகாசம் அளித்து, வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
*- ONE TAMIL NEWS | மதுரை*
tamilanda