முனைவர் மரிய தெரசாவும் 305 நூல்களும் - எழுத்துலகில் ஒரு சாதனைப் பெண்மணி!*
முனைவர் மரிய தெரசாவும் 305 நூல்களும் - எழுத்துலகில் ஒரு சாதனைப் பெண்மணி!
காரைக்கால், நவ.17:
எழுத்தை சுவாசமாகவும், இலக்கியத்தை வாழ்க்கையாகவும் கொண்டு வாழ்ந்து வரும் காரைக்காலைச் சேர்ந்த முனைவர் மரிய தெரசா, இதுவரை 305 நூல்களை எழுதி வெளியிட்டு தமிழ் இலக்கிய உலகில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார்.
காரைக்காலில் பிறந்த இவர், சிறு வயது முதலே தமிழின் மீது தீராத காதல் கொண்டவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், ஆய்வு நூல்கள், குழந்தை இலக்கியம், ஆன்மிகம், மொழிபெயர்ப்பு என 52 வகைப்பாட்டில் 35 நூல்களை வெளியிட்டு தீவிர எழுத்துப் பணியாளராக திகழ்ந்து வருகிறார்.
*கல்வித் தகுதி: :
தமிழில் எம்.ஏ, எம்.ஃபில், பி.எட், பி.எச்.டி என முனைவர் பட்டம் வரை படித்து முடித்துள்ள இவர், அதோடு நின்றுவிடவில்லை. இந்தி மொழியிலும் சாகித்ய ரத்னா, பாராங்கத், விசாரத், பிரசாரக் ஆகிய பட்டங்களையும் பெற்று பன்மொழிப் புலமை பெற்றவராக விளங்குகிறார்.
*குவியும் விருதுகள்:
இவரது இலக்கியப் பணியைப் பாராட்டி தமிழக அரசு *தமிழ்ச் செம்மல் விருது* வழங்கி கௌரவித்துள்ளது. மேலும், மாநில அளவிலான மூத்த குடிமக்களில் *சிறந்த சாதனையாளர் விருது* உட்பட இதுவரை *170-க்கும் மேற்பட்ட விருதுகளை* பெற்று சாதனை படைத்துள்ளார்.
*பாடத்திட்டத்தில் இடம் பெற்ற நூல்கள்:*
இவரது கவிதைகள் வெறும் புத்தக அலமாரியில் மட்டும் இல்லை. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் பொள்ளாச்சி மு.நி.வி கல்லூரி பாடத்திட்டத்தில் இவரது நூல்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக 'பச்சைத் தேவதைகள்', 'விமரைக்கு' போன்ற நூல்கள் மாணவர்களால் பாடமாகப் படிக்கப்படுகின்றன.
இவரது நூல்களை மையமாக வைத்து இதுவரை *22 பேர் ஆய்வு செய்து பட்டம்* பெற்றுள்ளனர் என்பது இவரது எழுத்தின் ஆழத்தையும், தாக்கத்தையும் காட்டுகிறது.
*ஒரே மேடையில் வரலாற்றுச் சாதனை:*
முனைவர் மரிய தெரசாவின் மிகப்பெரிய சாதனை, ஒரே மேடையில் பல நூல்களை வெளியிட்டது தான்.
- கடந்த 4.3.2018 அன்று - *40 நூல்கள்*
- கடந்த 30.3.2022 அன்று - *100 நூல்கள்*
- கடந்த 24.4.2024 அன்று - *50 நூல்கள்*
என ஒரே மேடையில் வெளியிட்டு இலக்கிய உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார்.
*சமூகப் பணியிலும் முன்னோடி:*
எழுத்து மட்டுமல்ல, சமூக சேவையிலும் இவர் முன்னோடி. ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், அவர்களுக்கு தையல் இயந்திரம் வாங்கித் தந்து சுயதொழில் செய்ய வழிவகுத்துள்ளார்.
*கவிதை குடும்பம்:
இவரது இலக்கிய ஆர்வத்திற்கு குடும்பமே காரணம் எனலாம். இவரது தாயாரும், தம்பியும் கவிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கவிதை வளர்ந்த வீட்டில் பிறந்து, கவிதையாகவே வாழ்ந்து வருகிறார் முனைவர் மரிய தெரசா.
305 நூல்களைக் கடந்தும் இன்னும் எழுதிக் கொண்டே இருக்கும் இவரது பயணம், இளம் எழுத்தாளர்களுக்கும், பெண்களுக்கும் மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது.
tamilanda