தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது கணவர் உயிரிழப்பு - சுயாதீன விசாரணை கோரி மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு!
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது கணவர் உயிரிழப்பு - சுயாதீன விசாரணை கோரி மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு!
தூத்துக்குடி, நவ.11:
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது தனது கணவர் உயிரிழந்தது தொடர்பாக சுயாதீன மருத்துவ விசாரணை நடத்தி, இழப்பீடு வழங்கக் கோரி, உயிரிழந்த செந்திலின் மனைவி பூமாதேவி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
*மனுவில் அவர் கூறியிருப்பதாவது:*
எனது கணவர் செந்தில், கடந்த 05.11.2026 அன்று ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், 06.11.2026 அன்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அப்போது அவர் நன்றாகப் பேசிக்கொண்டிருந்தார். மருத்துவர்களும் பெரிய பிரச்சினை இல்லை என்று கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
விபத்துக்குப் பிறகு வயிற்றில் வீக்கம் இருந்ததால் ஸ்கேன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்கேனில் கல்லீரல் பகுதியில் திரவம் / இரத்தக் கசிவு இருப்பதாகவும், அதை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
அறுவை சிகிச்சைக்கு முன்பு, குடும்பத்தினருக்கு மருத்துவர்களிடமிருந்து ஒன்றுக்கொன்று முரண்பட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகவும், ஒருவர் உணவு சாப்பிடலாம் என்றும், மற்றொருவர் சாப்பிடக்கூடாது என்றும், ஒருவர் நடக்கலாம் என்றும், மற்றொருவர் நடக்கக்கூடாது என்றும் கூறியதால் குழப்பம் அடைந்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஸ்கேன் செய்யும் இடத்தில் பணியாற்றியவர், கணவரின் யூரியா அளவு அதிகமாக இருப்பதாகவும், கான்ட்ராஸ்ட் ஸ்கேன் செய்வதில் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்பதை மருத்துவர் கவனிக்க வேண்டும் என்றும் கூறியதாகவும், இந்த எச்சரிக்கையின் பேரில் என்ன மருத்துவ முடிவு எடுக்கப்பட்டது என்பதில் சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
09.11.2026 மதியம் 12.00 மணியளவில் அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படும் வரை கணவர் நன்றாகப் பேசிக்கொண்டிருந்ததாகவும், ஆபரேஷன் 3 மணி நேரம் நடைபெறும் என்று கூறிச் சென்றதாகவும், ஆனால் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பல்ஸ் குறைந்து விட்டது, இரத்தம் நிறைய போய்விட்டது, நுரையீரல் சுவாசம், இதயதுடிப்பு குறைந்து விட்டது என்று கூறி உயிரிழந்த நிலையில் ஒப்படைக்கப்பட்டதாகவும் மனுவில் கூறியுள்ளார்.
அப்போது, "துரதிர்ஷ்டவசமாகத் தவறு நடந்துவிட்டது; இதைப் பெரிதுபடுத்த வேண்டாம்" என்று ஒரு மருத்துவர் கூறியதாகவும் குடும்பத்தினர் தெரிவிப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையைப் பயிற்சி மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டதாகவும், தகுதி பெற்ற அறுவை சிகிச்சை மற்றும் மயக்கவியல் நிபுணர்கள் நேரடியாகப் பங்கேற்றார்களா, உரிய மேற்பார்வை இருந்ததா என்பதைச் சுயாதீனமாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
எனக்கு இரண்டு வயது குழந்தை உள்ளது. கணவரை இழந்ததால் குடும்பம் வாழ்வாதாரமின்றி ஆதரவற்ற நிலையில் உள்ளது. இதுபோன்ற சம்பவம் வேறு எந்தக் குடும்பத்திற்கும் நேரக்கூடாது என மனுவில் தெரிவித்துள்ளார்.
*அவரது கோரிக்கைகள்:*
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு உட்படாத, தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணர்கள் கொண்ட சுயாதீன மருத்துவக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
செந்திலின் முழுமையான மருத்துவப் பதிவுகள், ஸ்கேன் படங்கள், அறுவை சிகிச்சை மற்றும் மயக்க மருந்துப் பதிவுகள், ஒப்புதல் படிவங்கள், CCTV பதிவுகள் ஆகியவற்றை அழிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும்.
மருத்துவ அலட்சியம் அல்லது விதிமீறல் உறுதியானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணவரை இழந்து இரண்டு வயது குழந்தையுடன் தவிக்கும் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும்.
இந்த மனுவின் நகல் முதலமைச்சர், மருத்துவமனை கண்காணிப்பாளர், மருத்துவக் கல்வி இயக்குநர், சுகாதாரத்துறை செயலாளர், காவல் கண்காணிப்பாளர், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
tamilanda