சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் குடும்பத்துடன் விடுதலை!
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் குடும்பத்துடன் விடுதலை!
தூத்துக்குடி, நவ.03: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சொத்துக் குவிப்பு வழக்கில், திமுக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் 7 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி திருமதி. சுபா தேவி இன்று மாலை 4 மணிக்கு இந்த பரபரப்பு தீர்ப்பை வழங்கினார்.
வழக்கின் பின்னணி:
1. அனிதா ராதாகிருஷ்ணன் 2001 முதல் 2006 வரை ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார்.
2. அந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
3. 2006-ல் திமுக ஆட்சி அமைந்ததும்*, கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் இந்த வழக்கை பதிவு செய்தனர். அதாவது, திமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கில், பின்னாளில் திமுகவில் இணைந்த அனிதா ராதாகிருஷ்ணன் மீதே விசாரணை நடந்தது குறிப்பிடத்தக்கது.
4. 2001-ல் ரூ.23.36 லட்சமாக இருந்த சொத்து மதிப்பு, 2006-ல் ரூ.6.86 கோடியாக உயர்ந்ததாகவும், இதில் கணக்கில் வராத சுமார் 4 கோடியே 90 லட்சம் சொத்து சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு.
5. இந்த வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயந்தி, மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் மற்றும் சகோதரர்கள் சண்முகானந்தன், சிவானந்தன் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
கடந்த 20 ஆண்டுகளாக தூத்துக்குடி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சிகளிடம் விசாரணை, குறுக்கு விசாரணை நிறைவடைந்தது.
அரசு தரப்பு குற்றச்சாட்டை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க தவறியதாகக் கூறி, 7 பேரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
தீர்ப்பை கேட்க அனிதா ராதாகிருஷ்ணன் குடும்பத்துடன் நீதிமன்றத்தில் ஆஜரானார். தீர்ப்பை அடுத்து திமுக தொண்டர்கள் நீதிமன்ற வளாகத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
tamilanda