தமிழ்நாட்டின் முதன்மை கூட்டுறவு நிறுவனமான 'ஆவின்' சந்தித்து வரும் கடுமையான நெருக்கடி குறித்தும், பிற மாநில நிறுவனங்களின் ஆதிக்கம் குறித்தும் தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை நிறுவனத் தலைவர் வே.ச.முத்துக்குமார் விடுத்துள்ள அறிக்கை
நெல்லை, அக் 26:
தமிழ்நாட்டின் முதன்மை கூட்டுறவு நிறுவனமான 'ஆவின்' சந்தித்து வரும் கடுமையான நெருக்கடி குறித்தும், பிற மாநில நிறுவனங்களின் ஆதிக்கம் குறித்தும் தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை நிறுவனத் தலைவர் வே.ச.முத்துக்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் தினமும் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து சுமார் 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, அதனைப் பதப்படுத்தி பாக்கெட்டுகளாக மக்களுக்கு விநியோகித்து வருகிறது. விற்பனை போக எஞ்சிய பாலில் இருந்து தயிர், பனீர், வெண்ணெய், நெய், லஸ்சி, மோர், பால் பவுடர் என 230க்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்தன.
கடந்த ஆட்சிக்காலங்களில் சிறப்பான முறையில் கட்டமைக்கப்பட்ட இந்த உற்பத்தியின் மூலம், ஆவின் நிறுவனத்திற்கு மாதம் ரூ.60 கோடி வரையிலும், தலைநகர் சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு ரூ.1.50 கோடி மதிப்பிலான பால் மற்றும் பால் பொருட்களும் விற்பனையாகி வந்தன.
ஆனால், தற்போதைய நிர்வாகக் காரணங்களால் 100க்கும் மேற்பட்ட ஆவின் பால் பொருட்களின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. குறிப்பாக, நுகர்வோரிடம் அதிக வரவேற்பை பெற்ற பனீர், வெண்ணெய், பலவகை மில்க் ஷேக்குகள், பால் பவுடர், பாதாம், பிஸ்தா மற்றும் வால்நட் மிக்ஸ் பவுடர்கள், குக்கீஸ், சாக்லேட் போன்ற பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
ஆவின் நிறுவனம் தனது உற்பத்தியைக் குறைத்துக் கொண்டதால் ஏற்பட்டுள்ள சந்தை வெற்றிடத்தைப் பயன்படுத்தி, குஜராத்தின் 'அமுல்', கர்நாடகாவின் 'நந்தினி' போன்ற பிற மாநில கூட்டுறவுச் சங்கங்களும், ஆந்திராவைச் சேர்ந்த தனியார் பால் நிறுவனங்களும் தமிழ்நாட்டின் சந்தையை மிக வேகமாக ஆக்கிரமித்து வருகின்றன.
இந்நிலை தொடருமானால், தமிழ்நாட்டின் பெருமைமிக்க பொதுத்துறை நிறுவனமான ஆவின் முற்றிலும் முடங்கி, மூடப்படும் அபாயகரமான சூழல் உருவாகும். இதனால், ஆவினை மட்டுமே நம்பி வாழும் லட்சக்கணக்கான கிராமப்புற விவசாயிகள், பால்காரர்கள் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.
எனவே உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட ஆவின் பால் பொருட்களின் உற்பத்தியை மீண்டும் உடனடியாக முழுவீச்சில் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிமாநில கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகளின் நியாயமற்ற ஆதிக்கத்தில் இருந்து ஆவினை மீட்டு, மீண்டும் அதனை லாபகரமான நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
tamilanda