மீன் வியாபாரி உள்பட 2 பேர் வெட்டிக்கொலை: கோவில்பட்டியில் பயங்கரம்!

Spread the love

கோவில்பட்டியில் மீன் வியாபாரி உள்பட 2 பேரை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்திநகரைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் வெள்ளத்துரை (50). கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா அருகே மீன்கடை நடத்தி வரும் இவர், இரவில் மீன் கடையில் தூங்குவது வழக்கமாம். இந்தநிலையில் இன்று அதிகாலை சில மர்ம நபர்கள் வெள்ளத்துரை மற்றும் அவருடன் இருந்த சாமி என்பவரையும் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இதில் சாமி என்பவர் சம்பவ இடத்திலிருந்து சிறுது தூரம் ஓடி வந்த நிலையில் சாலையில் இறந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெள்ளத்துரையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து இரண்டு சடலங்களும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உடல்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் ஆகியோர் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா? கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். விளாத்திகுளம் காவல்துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *