கடன் பெற்றுத் தருவதாக ரூ.22.25 லட்சம் மோசடி: கோவை காவல் ஆணையரிடம் தூத்துக்குடி நபர்கள் புகார்

கடன் பெற்றுத் தருவதாக ரூ.22.25 லட்சம் மோசடி: கோவை காவல் ஆணையரிடம் தூத்துக்குடி நபர்கள் புகார்

கடன் பெற்றுத் தருவதாக ரூ.22.25 லட்சம் மோசடி: கோவை காவல் ஆணையரிடம் தூத்துக்குடி நபர்கள் புகார்

*கோயம்புத்தூர்:*

கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.22.25 லட்சம் மோசடி செய்ததாக தூத்துக்குடியைச் சேர்ந்த 3 பேர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜ், ரேவதி, தமிழ்செல்வன் ஆகியோர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த தீபக் என்பவர், தங்களுக்கு பின்னால் முன்னாள் அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பல கோடி ரூபாய் நிதி ஆதாரம் இருப்பதாகக் கூறி, குறைந்த வட்டியில் பெரிய தொகையை கடனாக பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இவருடன் இவரது மனைவி மற்றும் கூட்டாளிகளான விக்னேஷ், அஜீவ், ராகுல் ஆகியோர் சேர்ந்து செயல்பட்டுள்ளனர்.

ரேவதிக்கு ரூ.2 கோடி வரையும், நாகராஜுக்கு ரூ.40 லட்சம் வரையும், தமிழ்செல்வனுக்கு ரூ.25 லட்சம் வரையும் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, Loan Processing Fee என்ற பெயரில் பணம் கேட்டுள்ளனர்.

இதனை நம்பி கடந்த 19.01.2025 அன்று கோவை ரேஸ் கோர்ஸ் Welcome ITC ஹோட்டலில் வைத்து நாகராஜ் ரூ.3 லட்சமும், ரேவதி ரூ.7.20 லட்சமும், தமிழ்செல்வன் ரூ.4.15 லட்சமும், 29.01.2025 அன்று தூத்துக்குடியில் வைத்து நாகராஜ் ரூ.3.30 லட்சமும், ரேவதி ரூ.4.60 லட்சமும் என மொத்தம் ரூ.22,25,000/- வழங்கியுள்ளனர்.

பணத்தை பெற்றுக்கொண்ட பின் கடன் பெற்றுத் தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் ஏமாற்றியதுடன், வெற்று பத்திரங்கள் மற்றும் புரோநோட்டுகளில் கையெழுத்து பெற்றுக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதே நபர்கள் மீது ரூ.6.50 கோடி மோசடி செய்ததாக முருகானந்தம் என்பவர் அளித்த புகாரின் பேரில், கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவில் (CCB-I) கடந்த 12.08.2026 அன்று FIR http://Cr.No: 0025/2026 U/s 61(2)(a), 318(4) BNS பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதை அறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே தங்களது புகாரையும் தற்போது நிலுவையில் உள்ள http://Cr.No: 0025/2026 வழக்கோடு இணைத்து, தங்களை கூடுதல் பாதிக்கப்பட்டவர்களாக சேர்த்து, மோசடி செய்யப்பட்ட ரூ.22.25 லட்சம் மற்றும் ஆவணங்களை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.