வேலவன் ஹைபர் மார்க்கெட்டில் உள்ள கேஎஃப்சி நிறுவனத்திற்கு பூட்டு உணவு பாதுகாப்பு துறை அதிரடி

Spread the love

உணவு எண்ணெய்க்கு அனுமதி இல்லாத மெக்னீசியம் சிலிக்கேட்-சிந்தடிக் என்ற உணவுச் சேர்மத்தினை, மீதமான பழைய உணவு எண்ணெயைத் தூய்மைப்படுத்த பயன்படுத்தியதால், கே.எஃப்.சி உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து – உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அதிரடி நடவடிக்கை.
*
சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ, உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வேணா,
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, ஆகியோரின் வழிகாட்டுதலில் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. அச்சிறப்பான செயல்பாட்டினைத் தொடரும் விதமாக, இன்று (04.07.2024) தூத்துக்குடி வேலவன் ஹைப்பர் மார்க்கெட் வளாகத்தில் உள்ள கே.எஃப்.சி என்ற உணவகமானது, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர்.மாரியப்பன் அவர்கள் தலைமையில், சம்பந்தப்பட்ட பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வின் போது, உணவு எண்ணெய்க்கு அனுமதி இல்லாத மெக்னீசியம் சிலிகேட்-சிந்தடிக் என்ற உணவு சேர்மத்தை, ஏற்கனவே பயன்படுத்தி மீதமாகி அப்புறப்படுத்த வேண்டிய பழைய உணவு எண்ணெயைத் தூய்மைப்படுத்துவதற்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. எனவே, 18 கிலோ மெக்னீசியம் சிலிக்கேட்-சிந்தடிக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அதைப் பயன்படுத்தி தூய்மைப்படுத்தப்பட்ட 45 லிட்டர் பழைய உணவு எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், முன்தயாரிப்பு செய்து, 12 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்தாமல் இருந்த, 56 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தவும், பொது சுகாதாரத்திற்கு கேடுவிளைவிக்கும் வகையில், இருப்பு பதிவேட்டிலேயே குறிப்பிடப்படாமல் தனியாக மெக்னீசியம் சிலிக்கேட்-சிந்தெட்டிக் என்ற உணவுச் சேர்மத்தினை இருப்பு வைத்து, அதைப் பயன்படுத்தி, அனுமதியற்ற வகையில், பழைய எண்ணெயினை தூய்மைப்படுத்த பயன்படுத்தியது குறித்து விசாரணை நடத்திட ஏதுவாகவும் கே.எஃப்.சி உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமமானது இடைக்காலமாக தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டது. இந்த உத்தரவினை விலக்கிக்கொள்ளப்படும் வரை அந்த உணவகம் இயங்கக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீறும்பட்சத்தில், வளாகம் மூடி சீலிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மெக்னீசியம் சிலிக்கேட்-சிந்தெட்டிக் மற்றும் அதைப் பயன்படுத்தி, தூய்மைப்படுத்தப்பட்ட பழைய உணவு எண்ணெய் ஆகியவற்றிலிருந்து, உணவு மாதிரி எடுக்கப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டு, தொடர் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து, மாநகரில் சில இடங்களில் பானிபூரி கடைகள் ஆய்வு செய்யப்பட்டன. அக்கடைகளில் இருந்த பாணியில் செயற்கை நிறமிகள் ஏதும் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்படவில்லை. இருப்பினும், கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஆய்வில், மூன்று பாணி உணவு மாதிரிகளும், 3 பானிபூரி மசாலா உணவு மாதிரிகளும் எடுக்கப்பட்டு, பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கை, வரப்பெற்ற பின்னர் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்படுகின்றது.

ஹோட்டல்/ரெஸ்டாரண்ட் வணிகர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்:

  1. ஒருமுறைப் பயன்படுத்தி ஆறவைத்த சமையல் எண்ணெயை, மறுபடியும் சூடுபடுத்தி எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது.
  2. ⁠உணவு எண்ணெய்க்கு அனுமதியற்ற உணவுச் சேர்மத்தினைக் கொண்டு, பழைய எண்ணெயைத் தூய்மைப்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், உணவகம் உடனடியாக மூடப்படும் என்றும் எச்சரிக்கப்படுகின்றது.

பானிபூரி விற்பனையாளர்கள் கவனத்திற்கு:

  1. செயற்கை வண்ணங்களை பானியில் கலக்கக்கூடாது.
  2. ⁠உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மொய்க்காவண்ணதும், தூசிகள் விழாதவாறும் மூடி வைத்தும், கிருமி தொற்று ஏற்படாத சுகாதாரமான சூழலில் வைத்தும் பொது மக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும்.
  3. ⁠பணியாளர்கள் தலைத்தொப்பி, கையுறை, ஏப்ரன் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் அணிந்திருக்க வேண்டும்.
  4. ⁠பானியையும், மசாலாவையும் தனித்தனியாக வழங்கி, நுகர்வோரே பூரியில் துளையிட்டுக்கொள்ள கேட்டுக்கொள்ள வேண்டும். தவிர்க்க இயலாத சூழலில், பணியாளர் கையுறை அணிந்து தான் பூரியில் துளையிட வேண்டும். அந்தக் கையுறையையும் குறைந்தது ஒரு மணிக்கொருமுறை மாற்ற வேண்டும்.

மேலும், நுகர்வோர்களுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகக் கட்செவி எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் TN Food Safety என்ற புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும்.

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்ட நெறிமுறைகளை வணிகர்கள் பின்பற்ற தவறினால், மேற்கூறிய சட்டத்தின் கீழ் பறிமுதல், வியாபாரம் நிறுத்தம், நியமன அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலரிடத்தில் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு போன்ற கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்றும் கடுமையாக எச்சரிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *