தூத்துக்குடியில் இணையதளத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என இன்ஸ்டாகிராம் மூலம் ரூபாய் 15,65,000/- பணம் மோசடி செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி கைது

Spread the love

தூத்துக்குடியில் இணையதளத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என இன்ஸ்டாகிராம் மூலம் ரூபாய் 15,65,000/- பணம் மோசடி செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி கைது – 21 செல்போன்கள், ஒரு லேப்டாப், ரொக்கப் பணம் ரூபாய் 40,000/-, ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஒரு கார் போன்றவை பறிமுதல் – சைபர் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.

தூத்துக்குடி கோமதிபாய் காலனியைச் சேர்ந்த ஒருவர் இன்ஸ்டாகிராமில் முதலீடு சம்பந்தமாக வந்த விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள நபரை தொடர்பு கொண்டபோது அந்த மர்மநபர் Saxo என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பி மேற்படி பாதிக்கப்பட்ட நபர் ரூபாய் 15,65,000/- பணத்தை அதில் முதலீடு செய்துள்ளார்.

பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த மேற்படி பாதிக்கப்பட்ட நபர் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.

மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. எடிசன் அவர்கள் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் (பொறுப்பு) திரு. சோமசுந்தரம் தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்த எதிரிகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் பெங்களூர் குலிமாவ் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் பாண்டீஸ்வரன் (38) என்பவர் மேற்படி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மேற்படி போலீசார் பெங்களூர் சென்று பாண்டீஸ்வரனை கைது செய்து அவரிடம் இருந்து 21 செல்போன்கள், ஒரு லேப்டாப், ரொக்கப் பணம் ரூபாய் 40,000/-, ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஒரு கார் போன்றவற்றை பறிமுதல் செய்து தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு நேற்று (03.11.2024) தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் IV ல் ஆஜர்படுத்தப்பட்டு பாண்டீஸ்வரனை தூத்துக்குடி பேரூரணி சிறையிலடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்று பகுதி நேர வேலை, ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம், ஸ்டார் ரேட்டிங் கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று இணையதளம், வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்றவற்றின் மூலம் வரும் போலியான விளம்பரங்களை நம்பி அதில் வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும், தேவையில்லாத செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், இளைஞர்கள் பெண்கள் ஆகியோர் இதுபோன்ற போலியான விளம்பரங்களை தவிர்த்து சைபர் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *