தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரையில் திமுகவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக மறைந்த என்.பெரியசாமி சட்டமன்ற உறுப்பினராகவும், நகர்மன்ற தலைவராகவும் என பல பதவிகளை வகித்து திறம்பட பணியாற்றி கலைஞரின் முரட்டு பக்தன் என பெயர் பெற்று வலம் வந்தார். இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பெரியசாமி மறைந்தார்.
பின்னர் அவரது மறைவிற்கு பிறகு ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்ததை தூத்துக்குடி தெற்கு, வடக்கு என இரண்டாக பிரித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக அனிதா ராதாகிருஷ்ணனும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக கீதாஜீவனும் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டு, இரண்டு பேருக்கும் தலா 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணியாற்றி வந்தனர்.
அதன் பின், தலைமை கழகத்தால் முறையாக தேர்தல் நடைபெற்று மாவட்ட செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது வரை அமைச்சராகவும் பணியாற்றி வருகின்றனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தைப் பொறுத்தவரை திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம் என இரு தொகுதிகள் திமுக வசமும், ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வசமும் தற்போது இருந்து வருகின்றன. எதிர்வரும் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெல்வோம் 200, சொல்வோம் வரலாறு என்ற கோஷத்துடன் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், மாநில இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க அனைத்து மாவட்ட செயலாளர்களும் தங்களது பகுதிக்குள் வரும் சட்டமன்ற தொகுதிக்குள் அனைத்துப் பணிகளையும் கிளைச்செயலாளர் முதல் ஒன்றிய செயலாளர்கள் வரை முடுக்கி விட்டு பணிகளை செய்து வருகின்றனர். இந்த இலக்கை அடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு தற்போது கூடுதலாக பல மாவட்ட செயலாளர்களை திமுக தலைமைக் கழகம் அறிவித்து அவர்களுக்குரிய தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் இளைஞர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எந்த பணியை மேற்கொண்டாலும் அதை சிறப்பாகவும், சற்று வித்தியாசமாகவும் செய்து அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கக் கூடியவர். காரணம், அதிமுக என்ற ஆலமரத்தின் கீழ் இருந்து படிப்படியாக வளர்ந்து வந்தவர். அதனால் அனைவரையுமே அரவணைத்துச் செல்வதில் வல்லவர். தலைமைக் கழகம் இடும் எந்த உத்தரவானாலும் அதை உடனே நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக தனக்கு கீழ் பணியாற்றும் பொறுப்பாளர்களை சில சமயங்களில் சற்று கடிந்து கொள்வதும் வழக்கம். தனக்கு பின் அரசியல் வாரிசாக தனது மகனை களமிறக்கி சில காலம் களப்பணியாற்றினார். அதன் பின் தனது பயணத்திற்கு அவரது மகன் ஒத்துவராத நிலையில், சில சுணக்கம் ஏற்பட்டது. தற்போது, திமுக தலைமை எடுக்கும் முடிவுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கட்டுப்பட்டு நடப்பவர் தான். ஆனால், அவரது உடல்நிலை இவரது ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாத சூழல் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. களம் என்று வந்தால் எல்லோரும்; இவரால் வளம் பெறுவார்கள். 2026 தேர்தல் களத்தில் மற்ற அணிகளுக்கு ஈடுகொடுத்து செல்வது என்பது கொஞ்சம் சிரமப்படும் என அக்கட்சியை சேர்ந்த பலரும் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. தொகுதிக்கு நல்லவர் தான். மற்றவர்களுக்கு வல்லவர் தான். தேர்தல் நேரத்தில் வலம் வருவதற்கு புதிய இரத்தம் பாய்ச்சும் விதமாக மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என பலருடைய எண்ணமாக இருந்து வருகிறது.
உதயநிதியின் இதய துடிப்பு இளைஞர்களின் எழுச்சிமிகு தலைவராக வலம் வரும் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி வக்கீல் ஜோயலுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது 90 சதவிகித தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. இதை தலைமைக் கழகம் நிறைவேற்றுமா? புதிய ரத்தம் பாய்ச்சிட இளைஞருக்கு வாய்ப்பு வழங்குவார்களா? 2026 இல் திமுக வெற்றி பெற வேண்டும் என்று சொன்னால் தெற்கு மாவட்டம் தேய்ந்து கொண்டிருப்பதை தடுத்து நிறுத்திட வக்கீல் ஜோயலுக்கு வழங்க வேண்டும் என்பது பலருடைய கோரிக்கையாக இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.